அன்று,தாயின் மடி எனக்காக காத்திருந்தது !தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை !ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் !என் தாய் என் அருகில் இல்லை

சனி, 8 மே, 2010

அம்மா


உலர்ந்த துணிகளை
மடிக்கும் போதெல்லாம்
நினைவில் வந்து
உறுத்துகிறது
இல்லாத ஆடைகள்..
அம்மாவின் மறைவு!
எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மாவிடம் விடை இருந்தது..
அம்மா இல்லாமல் போனதும்..
இருப்பதெல்லாம்
ஒரே கேள்விதான்..
எங்களை விட்டு
எங்கே போனாய்..?
இப்போதெல்லாம் சுலபமாய்
மற்ற பெண்களை
'அம்மா' என்றழைக்க முடிகிறது..
இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு!

( உற்சாகப்படுத்தும் அன்பு நண்பர்களுக்கு நன்றி கலந்த கண்ணீர்த் துளிகள் சமர்ப்பணம் ! )

அடுப்பங்கரையில் அம்மா!


சேவலை எழுப்பிவிட்டு
முன்வாசல் துடைத்து தெளித்து
அழிந்துவிடுமென தெரிந்தும்
அளவு புள்ளிகளிட்டு சித்திரம் வரைந்து
வானத்து சூரியன் வருமுன்னே
நெருப்பு சூரியன் உதிக்க வைத்து
நெடுநேரமாய் அங்குதான் நிற்பாள் அம்மா.
அடுப்பினை ஊதினாலும்
புகைபடியாத சுவாசம்
"புகைபிடியாத" மன நேசம்
கண்களன்றி காதலித்து
காதலினால் கருத்தரித்து
"கருவறை சுத்தம்"
ஒருபோதும் செய்ததில்லை
"ஒவ்வாத பானம்" நுகர்ந்ததில்லை
ஒழுக்கமே வாழ்க்கையென
போற்றி வாழும் அம்மா ஊர் எல்லை தாண்டியதில்லை
எங்கள் ஊர் காவல் தெய்வம் போல.
வீணான கனவுகள்
கலைய விருப்பமின்றி
உறங்கி நடிக்கும் என்
நடிப்புத் தூக்கம் துக்கம் கலைத்து
கல்வி கலை இசையென கற்றிட செய்து
இம்மியளவும் என் வாழ்க்கை
சலித்துபோய் விடாது
தினம்தோறும் எனக்காக வாழும் அம்மா.
ஊரெல்லாம் சுற்றி
காணாத மனிதர்கள் கண்டு
கையில் நடைபேசியுமாய்
காலில் கணினியுமாய்
அலைந்து திரிந்து வீடு திரும்புகையில்
அன்போடு அரவணைக்கும் அம்மா
அறிகின்றேன் உண்மையான அன்பும்
நல்ல ஒழுக்கமும்தான் வாழ்க்கையும் கடவுளும்.

யோசிக்கின்றேன்
இனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை
யாருமில்லா அடுப்பங்கரையில்
துயரம் தாங்கி உலவ வேண்டும்
நான வீடு சேரும் வரை

அம்மா


அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன